ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நல திட்டங்கள்... பிரதமர் மோடி அரியானா பயணம்
கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளும் பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன.
குருகிராம்,
பிரதமர் மோடி அரியானாவின் குருகிராம் நகருக்கு இன்று சாலை வழியே பேரணியாக திறந்த நிலையிலான காரில் சென்றார். அவரை கட்சியினர், பொதுமக்கள் என பலரும் திரண்டு நின்று வரவேற்றனர். அவர்களை நோக்கி காரில் நின்றபடியே பயணித்து, கையசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். அவருடைய வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து அவர், டெல்லி மற்றும் குருகிராம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அரியானா பிரிவுக்கு உட்பட்ட துவாரகா விரைவு சாலையை இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்ட துவக்க விழாவுக்கு முன் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்டோருடன் சென்று துவாரகா விரைவு சாலையை அவர் பார்வையிட்டார். இதில், 19 கி.மீ. நீள 8 வழி சாலையானது ரூ.4,100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது.
இதுதவிர, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளும் பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன.
இவை தவிர, நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான பல்வேறு மாநிலங்களும் பயன் அடையும் வகையிலான வெவ்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான நலத்திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.
இதனால், நாட்டில் சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் பெருகும். நாடு முழுவதும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.