பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு: கர்நாடக மக்கள் வரவேற்பு

பெட்ரோல்,டீசல் விலை குறைந்து இருப்பதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.

Update: 2022-05-21 21:55 GMT

பெங்களூரு: பெட்ரோல்,டீசல் விலை குறைந்து இருப்பதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.

வாங்கும் சம்பளத்தில்...

பெட்ரோல்-டீசல் விலையை அதிரடியாக குறைத்து நேற்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7-ம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை குறைவை வாகன ஓட்டிகள் வரவேற்று கருத்து தெரிவித்து உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ராஜாஜிநகரை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் கூறும்போது, 'நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். தினமும் அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் சென்று வருகிறேன். வேலைக்கு, வெளியே செல்ல ஸ்கூட்டருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பெட்ரோலுக்காக செலவு ஆகிறது. நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு தொகையை பெட்ரோலுக்கு ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50 குறைத்து உள்ளனர். ஆனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.60 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்பதே கருத்து' என்றார்.உணவு விற்பனை பிரதிநிதி நவீன் என்பவர் கூறும்போது, 'நான் தினமும் 150 கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து உணவு வினியோகம் செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ரூ.500-க்கு பெட்ரோல் போடுகிறேன். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50 குறைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் இன்னும் குறைக்க வேண்டும் என்பது தான் கருத்து. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.60 முதல் 70 வரை நிர்ணயம் செய்யலாம்' என்றார்.

விலை குறைத்தது மகிழ்ச்சி

தனியார் நிறுவன ஊழியர் ராமானந்த் கூறுகையில், 'நான் மைசூருவை சேர்ந்தவன். பெங்களூருவில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறேன். வாரந்தோறும் எனது காரில் மைசூருவுக்கு சென்று வருகிறேன். காருக்கு டீசல் போடவே ஒரு செலவு ஆகிறது. 35 வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7 ஆக இருந்தது. தற்போது அசுர வேகத்தில் உயர்ந்து செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைத்தது மகிழ்ச்சி தான் என்றாலும் இன்னும் குறைக்க வேண்டும்' என்றார்.ராஜாஜிநகரை சேர்ந்த மனு சூரஜ் என்பவர் கூறுகையில், 'நான் கோரமங்களாவில் உள்ள தனியார் நிறுவவனத்தில் வேலை செய்து வருகிறேன். இங்கு இருந்து கோரமங்களாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருகிறேன். தினமும் ரூ.200-க்கு பெட்ரோல் போட்டு வருகிறேன். ரூ.200-க்கு பெட்ரோல் செலுத்தினாலும் 2 லிட்டர் கூட வருவது இல்லை. தற்போது பெட்ரோலை லிட்டருக்கு ரூ.9.50 குறைத்தது மகிழ்ச்சி' என்று கூறினார்.

கவுசிக் என்ற கல்லூரி மாணவர் கூறுகையில், 'பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50 குறைத்தது மகிழ்ச்சி. வார இறுதி நாட்களில் எனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நீண்ட தூர பயணம் செல்ல நன்றாக இருக்கும். பெட்ரோல் விலை உயர்வால் வெளியே செல்வதை தவிர்த்து வந்தேன். இன்னும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்' என்றார்.

சரியான நபர்களுக்கு கிடைக்க...

உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மங்களூரு கத்ரியை சேர்ந்த ரெங்கம்மாள் என்ற மூதாட்டி கூறுகையில், 'மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்குகிறது.

இதனை வரவேற்கிறேன். ஆனால் இந்த மானியம் சரியான நபர்களுக்கு கிடைக்க வேண்டும். இதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அவ்வறு கிடைக்கவில்லை என்றால் ஏழை மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்