பி.எப்.ஐ. அமைப்பு மீதான தடைக்கு வரவேற்பும், எதிர்ப்பும்..!!
.எப்.ஐ. அமைப்பினை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை வரவேற்றும், எதிர்த்தும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.;
புதுடெல்லி,
முக்தர் அப்பாஸ் நக்வி (பா.ஜ.க. மூத்த தலைவர்):-
ஜனநாயகத்துக்கு எதிராகவும், வன்முறை சதியின் ஒரு பகுதியாகவும் இருந்த இந்திய எதிர்ப்பு சக்திகளின் பினாமிகளாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் நாட்டு மக்கள் பாதுகாப்புக்கு அரசு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதிலும் சிலர் அரசியல் ஆதாயம் அல்லது இழப்பு பார்வை பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது.
சி.டி. ரவி (பா.ஜ.க. பொதுச் செயலாளர்):-
பி.எப்.ஐ. அமைப்பு காங்கிரஸ் கட்சியால் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். இது சிமி அமைப்பின் அவதாரம்தான். இது பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையது. நாட்டில் சமூக அமைதியின்மையை ஏற்படுத்துகிறது.
ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ் பொதுச்செயலாளர்):-
காங்கிரஸ் கட்சியானது, பெரும்பான்மை அல்லது சிறுபான்மை இனவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வகைகளுக்கு எதிராக எப்போதும் இருந்து வருகிறது, அது தொடரும். சமூகத்தை பிளவுபடுத்துவதற்காக மதத்தை தவறாக பயன்படுத்துகிற எல்லா சித்தாந்தங்கள் மற்றும் அமைப்புகளை சமரசமின்றி எதிர்த்து எப்போதும் போராடுவது காங்கிரசின் கொள்கை ஆகும்.
ரமேஷ் சென்னிதலா (கேரள மாநில காங். மூத்த தலைவர்):-
பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்யும் மத்திய அரசின் முடிவு நல்ல விஷயம். இதே போன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தடை செய்யப்பட வேண்டும்.
பெரும்பான்மை இனவாதமும் சிறுபான்மை இனவாதமும் சம அளவில் எதிர்க்கப்பட வேண்டும். இரு அமைப்புகளுமே இனவாத வெறுப்பை தூண்டி சமூகத்ததை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன.
எம்.கே.முனீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர்):-
இந்த அடிப்படைவாத அமைப்பு, குரானை தவறாக புரிந்து கொண்டு, வன்முறைப்பாதையில் செல்வதற்கு சமூகத்தை வற்புறுத்துகிறது.
லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டீரிய ஜனதாதளம்):-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்து அடிப்படைவாத அமைப்பு, அதுவும் தடை செய்வதற்கு தகுதியானது. இதை முதலில் செய்ய வேண்டும்.
சீதாராம்யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர்):-
பி.எப்.ஐ. போன்ற அமைப்புகளை தடை செய்வது தீர்வு ஆகாது. அவற்றை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்துவதும், அவர்களது குற்றச்செயல்பாடுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதும்தான் சிறப்பான தீர்வு ஆகும்.
ஒவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித்தலைவர்):-
பி.எப்.ஐ. அமைப்பின் அணுகுமுறையை நான் எப்போதுமே எதிர்த்து வந்துள்ளேன். ஜனநாயக அணுகுமுறையை ஆதரித்து இருக்கிறேன். ஆனால், பி.எப்.ஐ. மீதான இந்த தடையை ஆதரிக்க முடியாது. ஆனால் இது போன்ற கடுமையான தடை ஆபத்தானது. ஏனென்றால், எந்த ஒரு முஸ்லிம் தனது மனதில் தோன்றுகிற கருத்தை சொல்ல விரும்புகிறாரோ அவர் மீதான தடை ஆகும். இந்தியாவின் தேர்தல் எதேச்சதிகாரம், பாசிசத்தை அணுகும் விதத்தில், ஒவ்வொரு முஸ்லிம் இளைஞரும், இப்போது இந்தியாவின் கருப்பு சட்டமான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், பி.எப்.ஐ. துண்டுப்பிரசுரத்துடன் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
முஸ்லிம் அமைப்புகள் கருத்து
பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை அனைத்திந்திய வக்கீல்கள் சங்கம் (ஏஐபிஏ) வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கை, மோடி அரசின் மற்றொரு துல்லிய நடவடிக்கை என அது தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு, இந்த அமைப்பை முற்றிலும் கலைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
முஸ்லிம் அமைப்புகளில் ஒன்றான எம்.எஸ்.ஓ.வும் ( முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு) வரவேற்றுள்ளது.
அஜ்மீரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிற அனைத்து இந்திய சுபி சஜ்ஜாதானஷின் கவுன்சில் அமைப்பும் தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.