மணிப்பூரில் 23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் கொள்ளை - டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை

கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை திருப்பித் தருமாறு டி.ஜி.பி. டவுங்கல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2023-05-05 19:24 GMT

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு எஸ்.டி. என்னும் பழங்குடி இன அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் ஆகும். இவர்களுக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்க பழங்குடி இனத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், 4 வாரத்துக்குள் மெய்டீஸ் இன மக்களின் எஸ்.டி. அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மணிப்பூர் ஐகோர்ட்டு சமீபத்தில் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடந்தது. இதில் சவுரசந்திரபூர் மாவட்டத்தில் டார்பங் பகுதியில் மாணவர் அமைப்பின் பேரணிக்கு போட்டியாக பழங்குடி இனத்தினர் அல்லாதோர் பேரணி நடந்தது.

இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு, மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. வீடுகள், வாகனங்கள், கடைகள் தீயிட்டுக்கொள்ளுத்தப்பட்டன. இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வழிபாட்டுத்தலங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சில மாவட்டங்களில் ஊரடங்கு போடப்பட்டது. மாநிலம் முழுவதும் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. வன்முறை பாதித்த பகுதிகளில் ராணுவமும், அசாம் ரைபிள் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து 7 ஆயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கலவரத்தின் போது மணிப்பூரில் 23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. டவுங்கல் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆயுதங்களை களவாடிய நபர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளதாக தெரிவித்த அவர், தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டி.ஜி.பி. டவுங்கல் தெரிவித்துள்ளார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்