மக்களுக்கு நிலையான வாழ்க்கை சூழலை ஏற்படுத்த பணியாற்றுகிறோம்
மக்களுக்கு நிலையான வாழ்க்கை சூழலை ஏற்படுத்த பணியாற்றுகிறோம் என்று மத்திய அரசின் வனம்-சுற்றுச்சூழல் துறை சிறப்பு செயலாளர் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
சிறப்பான பங்களிப்பு
ஜி20 நாடுகள் சபையின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற குழுவின் முதல் கூட்ட தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசின் வனம், சுற்றுச்சூழல், காலநிைல மாற்றத்துறை சிறப்பு செயலாளர் சந்திரபிரகாஷ் கோயல் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தை தடுக்க ஜி20 நாடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. இதற்கு முன்பு இந்த சபைக்கு தலைமை வகித்த நாடுகளும் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. அந்த நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுகிறோம். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற நோக்கத்தில் நிலையான வாழ்க்கை சூழலை ஏற்படுத்த பணியாற்றுகிறோம். இவ்வாறு சந்திரபிரகாஷ் கோயல் பேசினார்.
காட்டுத்தீ
மத்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி மண்டல இயக்குனர் ஏ.எஸ்.ராவத் பேசும்போது, "சட்டவிரோதமான கல்குவாரி, காட்டுத்தீ போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கவனித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அவசியம்" என்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள வெளிநாடுகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்கள் நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூறினர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து வெளிநாட்டு பிரதிநிதிகள், கல்கெரேயில் உள்ள மரப்பூங்கா மற்றும் பன்னகரட்டா உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்கள். இந்த கூட்டம் நாளை (சனிக்கிழமை) நிறைவடைகிறது. கர்நாடகத்தில் ஏற்கனவே நிதி, மின்சாரம் குறித்த குழுக்களின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.