நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் - பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஏக்நாத் ஷிண்டே
நாங்கள் நாளை மும்பை வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.;
மும்பை,
மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டுள்ளார். போலியான கடிதம் வெளியானதாக கூறப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில கவர்னர் கோஷ்யாரி ஆணையிட்டார்.
நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்தவும் சட்டமன்ற செயலருக்கு கவர்னர் கோய்ஷாரி கடிதம் அனுப்பினார். ஏற்கனவே மராட்டிய கவர்னரை பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, நாளைய சிறப்புபேரவை கூட்டத்தை வீடியோபதிவு செய்ய வேண்டும் எனவும் மராட்டிய கவர்னர் உத்தரவிட்டார். இந்நிலையில், மராட்டிய சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டதற்கு எதிராக சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், நாங்கள் நாளை மும்பை வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம். அதன் பிறகு, சட்டமன்றக் கட்சியின் கூட்டம் நடைபெறும், இதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கை முடிவு செய்யப்படும்" என்று ஷிண்டே மும்பைக்கு புறப்படுவதற்கு முன் கவுகாத்தி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
"நாங்கள் கிளர்ச்சியாளர்கள் அல்ல. நாங்கள் தான் சிவசேனா. பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாவின் சித்தாந்தத்தையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். இந்துத்துவா சித்தாந்தம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம் என்றார்.