பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்; ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் போர்க்கொடி

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும், ஜனதா தளம் (எஸ்) கட்சி எங்களுடையது என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-10-16 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஒன்று. இதன் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளார். இக்கட்சியின் மாநில தலைவராக சி.எம்.இப்ராகிம் உள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தல்களில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டிய நிலையில் இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதை அக்கட்சி தலைவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த தோல்விக்கு காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் தான் காரணம் என அக்கட்சி தலைவர்களான தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் கருதுகிறார்கள்.

இதனால் காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்கட்சி தலைவர்கள், பா.ஜனதாவுடன் கரம்கோர்க்க முடிவு செய்தனர். அதன்படி வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேவேகவுடா தலைமையிலான ஜனதா தளம் (எஸ்) கட்சி சேர்ந்துள்ளது.

இந்த கூட்டணிக்கு ஜனதா தளம் (எஸ்) நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் அக்கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளனர். கட்சியின் மாநில தலைவராக உள்ள சி.எம்.இப்ராகிம், கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தார். கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு தன்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் தலைமையில் கட்சியின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மூத்த தலைவர் எச்.டி.குமாரசாமி, எச்.டி.ரேவண்ணா மற்றும் மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்க வில்லை.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் சி.எம்.இப்ராகிம் பேசியதாவது:-

உண்மையான ஜனதா தளம் (எஸ்) கட்சி எங்களுடையது. என்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது. ெசன்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமி வெற்றி பெற்றது எப்படி?. முஸ்லிம்கள் வாக்களிக்காமல் இருந்து இருந்தால் அவர் எம்.எல்.ஏ. ஆகி இருக்க முடியாது. குமாரசாமி குறித்து தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்க மாட்டேன். எக்காரணம் கொண்டும் நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். நான் ஒருங்கிணைப்பு குழு அமைப்பேன்.

எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தொடர்பு கொள்வேன். கட்சி குடும்ப சொத்து அல்ல. கட்சி நிர்வாகிகள் அனைவரின் கருத்தும் அவசியம். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. ஆனால் கொள்கை-கோட்பாடு என்பது வேறு. அதனால் தான் பா.ஜனதாவுடனான கூட்டணியை நான் எதிர்க்கிறேன்.

அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். நான் யாரை நம்பினேனோ அவரை என்னை கைவிட்டுவிட்டார். நாங்கள் எங்கள் வீட்டில் இருக்கிறோம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். அச்சுறுத்தவும் மாட்டேன். கடந்த 1995-ம் ஆண்டு நான் ஜனதா தளம் (எஸ்) தலைவராக பணியாற்றி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இதன் மூலம் தேவேகவுடாவை பிரதமராக்கினோம். குமாரசாமி திடீரென அமித்ஷாவை சந்தித்து பா.ஜனதாவுடன் கூட்டணி என்று அறிவித்துவிட்டார்.

நான் தனியாக ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பேன். அந்த குழுவில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். அதன் பிறகு கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தேவேகவுடாவை பிரதமர் ஆக்கியது மதச்சார்பற்ற கொள்கை தான். எக்காரணம் கொண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டோம்.

இவ்வாறு சி.எம்.இப்ராகிம் கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும், இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி நிரந்தரமாக தொடரும் என்றும் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்றும், தனியாக ஒருங்கிணைப்பு அமைப்பேன் என்றும் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வேளை ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டால், அவர் தனது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேரலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு வரும் நாட்களில் விடை கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்