காங்கிரசின் அடாவடியை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்

காங்கிரசின் அடாவடியை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று நளின்குமார் கட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2023-05-16 18:30 GMT

பெங்களூரு:-

பா.ஜனதா தொண்டர்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜனதா 66 இடங்களில் பெற்று பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் ஒசக்கோட்டையில் பா.ஜனதா தொண்டர்கள் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் கிருஷ்ணப்பா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், மூத்த தலைவர் ஈசுவரப்பா உள்ளிட்டோர் நேற்று ஒசக்கோட்டைக்கு சென்று காயம் அடைந்த பா.ஜனதா தொண்டர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். அதன் பிறகு நளின்குமார் கட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்மையாக கண்டிக்கிறேன்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கர்நாடகம் குண்டர்கள் மாநிலமாக மாறுகிறது. எங்கள் கட்சி தொண்டர்களை காங்கிரசார் தாக்குகிறார்கள். பிற மாவட்டங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒசக்கோட்டையில் எங்கள் கட்சியை சேர்ந்த கிருஷ்ணப்பாவின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்துள்ளனர். அங்கிருந்த அம்பேத்கரின் சிலையையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரசுக்கு அம்பேத்கர் மீது மரியாதை கிடையாது என்பது நாட்டிற்கே தெரியும். அரசியல் விரோதம் இருக்கலாம். ஆனால் ஆனால் அம்பேத்கரின் சிலையை தீவைத்து கொளுத்தியது சரியா?. தலித் மக்கள் மற்றும் அம்பேத்கருக்கு அவமரியாதை இழைத்து காங்கிரஸ் தான். இந்த சம்பவத்திற்காக காங்கிரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

பயப்பட மாட்டோம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வன்முறைகள் அதிகரிப்பது வழக்கம். இதற்கு இந்த சம்பவமே சாட்சி. காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தன உத்தரவாரம் தொடங்கியுள்ளது. காங்கிரசின் ரவுடித்தனத்தை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். இத்தகைய சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு.

போலீசார் நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டும். மாநிலத்தில் சில இடங்களில் பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தகையவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைகள் தொடா்ந்தால், நாங்கள் தீவிர போராட்டம் நடத்துவோம். நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். இதற்கு முன்பும் இத்தகைய சம்பவங்கள் நடந்தபோது நாங்கள் தக்க பாடம் கற்பித்தோம். போலீசார் காங்கிரஸ் தொண்டர்களாக மாறிவிட்டனரா?. சில இடங்களில் தாலிபான்கள் எழுந்து நின்றுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி

இந்த மாநிலம் எதை நோக்கி செல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதை பா.ஜனதா சகித்துக்கொள்ளாது. அதனால் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொய்களை கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். முதல்-மந்திரி பதிக்கு சண்டை போட்டு கொண்டிருப்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு நளின்குமார்

கட்டீல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்