பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது போல் ராஜஸ்தானிலும் தோல்வியடையும்..? - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதம்!

சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

Update: 2022-09-26 14:45 GMT

ஜெய்ப்பூர்,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார்.

இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. ஏனெனில் "ஒரு நபருக்கு, ஒரே பதவி" என்ற கொள்கை, கட்டாயம் கடைபிடிக்கப்படும் என்று காங்கிரசில் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதில் சச்சின் பைலட் புதிய முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது.

ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. மேலும், ராஜஸ்தானில் நேற்று இரவில் 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், "அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டால், பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது போன்று ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்படும்" என்று ராஜஸ்தான் எம்எல்ஏ சாந்தி தரிவால் கூறியிருக்கிறார்.

சபாநாயகர் சிபி ஜோஷியிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க செல்வதற்கு முன்பு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் சபாநாயகரைச் சந்திக்கச் செல்வதற்கு முன், அம்மாநில மந்திரி சாந்தி தரிவால் இல்லத்தில் நேற்று இரவில் நீண்ட ஆலோசனை நடத்தினர்.

அந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தரிவால், எம்எல்ஏக்களை எச்சரிப்பதைக் கேட்க முடிந்தது. அவர் கூறுகையில்:-

"அசோக் கெலாட்டிடம் இப்போது முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்கச் சொல்வது ஏன்? அசோக் கெலாட்டிற்கு இரண்டாவது பதவி கிடைத்ததும், இதைப் பற்றி(முதல்-மந்திரி பதவியை விட்டு விலகுவது) குறித்து பேசலாம்.

இதே போன்ற சதியால்தான் பஞ்சாபை இழந்தோம்.இப்போது ராஜஸ்தானை இழக்கும் தருவாயில் இருக்கிறோம்.அசோக் கெலாட்டை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கினால், பஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது போல், இங்கும் கட்சி தோல்வி அடையும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்