கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை அமைப்போம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை அமைப்போம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-03-29 23:22 GMT

பெங்களூரு:-

பல்வேறு யாத்திரைகள்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மந்திரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் அவர் விவாதித்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி. அதனால் எங்கள் கட்சி பலமாக உள்ளது. நாங்கள் பல்வேறு யாத்திரைகளை நடத்தி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். கடந்த 6 மாதங்களாக நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளோம். பூத் மட்டத்தில் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். கட்சியின் பல்வேறு அணிகளின் மாநாடுகள், சங்கல்ப யாத்திரை, விஜய சங்கல்ப யாத்திரை போன்றவற்றை நடத்தியுள்ளோம்.

பா.ஜனதாவுக்கு நற்பெயர்

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டுள்ளோம். மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கர்நாடகத்திற்கு கொடுத்துள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு, விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக-பொருளாதார ரீதியாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம்.

கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டங்கள், ஏழை மக்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி, இளைஞர் சக்தி குழுக்கள் அமைப்பு, தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். தலித் சமூகத்தில் உள் ஒதுக்கீடு வழங்கி இருக்கிறோம். இவ்வாறு நாங்கள் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, முடிவுகளை எடுத்துள்ளோம். இதனால் மக்களிடையே பா.ஜனதாவுக்கு நற்பெயர் ஏற்பட்டுள்ளது.

முழு பெரும்பான்மை

தேர்தலில் எங்கள் பணிகள் அடிப்படையில் மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறின. அந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை வழங்கவில்லை. அந்த குற்றச்சாட்டுகள் அவர்களையே திருப்பி தாக்கியுள்ளன. லோக்அயுக்தாவுக்கு நாங்கள் அதிகாரம் வழங்கினோம். அதனால் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காங்கிரசின் பாரம்பரியமான வாக்கு வங்கியை நாங்கள் உடைத்துள்ளோம். அதனால் அவர்கள் விரக்தியில் அரசுக்கு எதிராக வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கர்நாடகத்தில் வந்து சென்றதால், அது வாக்காளர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகிற மே மாதம் 13-ந் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில், பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்கும். எங்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். மீண்டும் 5 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி செய்யும்.

வேட்பாளர்கள் தேர்வு

எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் காங்கிரசுக்கு செல்ல மாட்டார்கள். டி.கே.சிவக்குமார் எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேசி டிக்கெட் கொடுப்பதாக கூறுகிறார். எங்கள் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு பணி தொடங்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்