ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல்: குலாம் நபி ஆசாத் வரவேற்பு
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.;
ஜம்மு,
ஜம்மு - காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புது டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டனர்.
அதன்படி ஜம்மு -காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், ஜம்மு- காஷ்மீருக்கு சட்டசபைதேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவர் குலாம் நபி ஆசாத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தேர்தல் அறிவிப்பை வரவேற்கிறோம். அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிறோம். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.