'பா.ஜ.க.வை எதிர்த்து நிதிஷ் குமார் இறுதிவரை போராடுவார் என்று எதிர்பார்த்தோம்' - ஜெய்ராம் ரமேஷ்

பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் முதல் கூட்டத்திற்கு நிதிஷ் குமார்தான் அழைப்பு விடுத்தார் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Update: 2024-01-28 07:17 GMT

புதுடெல்லி,

பீகார் மாநில முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ் குமார், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார் மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாகவும், தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் இன்று மாலையே மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.வை எதிர்த்து நிதிஷ் குமார் இறுதிவரை போராடுவார் என்று இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் எதிர்பார்த்ததாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பிகாரில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எதிர்வரும் நாட்களில் அங்கு என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. கடந்த ஆண்டு ஜூன் 18-ந்தேதி பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் முதல் கூட்டத்திற்கு நிதிஷ் குமார்தான் அழைப்பு விடுத்தார்.

அதைத் தொடர்ந்து பெங்களூருவில் கடந்த ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும், மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளிலும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த மூன்று ஆலோசனைக் கூட்டத்திலும் நிதிஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார்.

எனவே பா.ஜ.க.வையும், அதன் கொள்கைகளையும் எதிர்த்து நிதிஷ் குமார் இறுதிவரை போராடுவார் என்று இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் எதிர்பார்த்தோம்."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்