கொள்கை தொடர்பான விவகாரங்களில் பார்வைகளை பரிமாறி கொண்டோம்; மந்திரிகளுடனான ஆலோசனை பற்றி பிரதமர் டுவிட்

கொள்கை தொடர்பான விவகாரங்களில் பார்வைகளை பரிமாறி கொண்டோம் என மந்திரிகள் கவுன்சில் கூட்டத்தில் நடந்த ஆலோசனை பற்றி பிரதமர் மோடி டுவிட் செய்து உள்ளார்.

Update: 2023-07-03 18:53 GMT

புதுடெல்லி,

நடப்பு ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சியின் அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா சமீபத்தில் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மறுபுறம் பிரதமர் மோடியும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோருடன் கடந்த 28-ந்தேதி அவர் அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தினார்.

இதனை தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் மாற்றம் வரலாம் என தகவல்கள் வெளியாகின. குறிப்பாக சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து கூட்டணி கட்சிகளுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் வழங்க பா.ஜ.க. முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மராட்டிய அரசியலில் நேற்று மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் பல எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. கூட்டணி அரசில் இணைந்து கொண்டனர்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், மூத்த மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்தினார். செப்டம்பர் மாதம் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் பிரகதி மைதானத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடந்தது.

இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர், அதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பலன் நிறைந்த மந்திரிகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், பன்முக கொள்கை தொடர்பான விவகாரங்களில் பார்வைகளை பரிமாறி கொண்டோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

கூட்டம் முடிந்ததும், மந்திரிகள் கலைந்து சென்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதில் கடைப்பிடிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், மணிப்பூர் கலவரம், டெல்லி அவசர சட்ட மசோதா விவகாரம் மற்றும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.

இந்நிலையில், சில அமைச்சகங்கள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றை அமல்படுத்தியது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் மந்திரிகள் கவுன்சிலின் கூட்டங்களில் இதுபோன்ற விவாதங்கள் நடத்தப்பட்டன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்