மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விருப்பம்.. மோடி முன்னிலையில் இலங்கை அதிபர் பேட்டி

பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தபோது, அதில் இருந்து மீண்டுவர இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாக அநுர குமார தெரிவித்தார்.

Update: 2024-12-16 10:09 GMT

புதுடெல்லி:

இலங்கையின் அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அநுர குமார பேசும்போது, "இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். அந்த பகுதியில் உள்ள மீனவர்களால் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்கும் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அது இத்தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தபோது, அதில் இருந்து மீண்டு வர இந்தியா எங்களுக்கு பெரும் ஆதரவை வழங்கியது என்றும் அநுர குமார தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்