பாதுகாப்பு அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் வேலை மணிப்பூர் சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்

மணிப்பூரில், பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் மூண்டது.

Update: 2023-07-10 21:15 GMT

புதுடெல்லி, 

சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது. பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய, மாநில அரசுகளின் வேலை என்று மணிப்பூர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் மூண்டது. சுமார் 150 பேர் பலியானார்கள். இதற்கிடையே, 'குகி' பழங்குடியின மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கக்கோரி, 'மணிப்பூர் பழங்குடி கூட்டமைப்பு' என்ற தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணிப்பூர் ஐகோர்ட்டு பார் அசோசியேசன் உள்பட பலதரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 3-ந் தேதி நடந்த விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. மணிப்பூர் அரசு சார்பில், மக்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதை படித்து பார்த்து, வன்முறையை முடிவுக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்பது குறித்த யோசனைகளை செவ்வாய்க்கிழமை (இன்று) தெரிவிக்குமாறு மனுதாரர்களின் வக்கீல்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு மணிப்பூர் பழங்குடியின கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் கான்வால்வ்ஸ், பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்து விட்டதாகவும், வன்முறை நீடிப்பதாகவும் கூறினார்.

அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:-

உங்கள் கருத்துக்காக நாங்கள் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை கையில் எடுக்க முடியாது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய, மாநில அரசுகளின் வேலை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் அதை செய்ய வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நாங்கள் உத்தரவுதான் போட முடியும். அதற்குத்தான் உங்கள் உதவியை கேட்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருவதாக கூறினார்.

அதற்கு மனுதாரரின் வக்கீல் கான்சால்வ்ஸ், ஒவ்வொருவரும் 'குகி' பழங்குடியினருக்கு எதிராக உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

கோபம் அடைந்த நீதிபதிகள், 'மணிப்பூரில் பதற்றத்தை தூண்டிவிட இந்த கோர்ட்டை களமாக பயன்படுத்தக்கூடாது'' என்று கூறி, அவரை மேற்கொண்டு பேச அனுமதிக்கவில்லை.

இம்மனுக்கள் மீது இன்றும் விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்