இந்திய கிரிக்கெட் அணியால் நாம் பெருமை கொள்கிறோம்: பிரதமர் மோடி

இந்திய கிரிக்கெட் அணியால் நாம் பெருமை கொள்கிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Update: 2024-06-29 18:51 GMT

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. எனினும், தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து, அந்த அணியின் விக்கெட்டுகள் விழுந்தன.

இதனால், இந்திய அணியின் வெற்றி உறுதியானது. தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனை தொடர்ந்து, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில் இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட பதிவில், சாம்பியன்ஸ்! டி20 உலக கோப்பையை தனக்கே உரிய பாணியில் நம்முடைய அணி, இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது!

இந்திய கிரிக்கெட் அணியால் நாம் பெருமை கொள்கிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்