நாங்கள் இருக்கிறோம் - டெல்லி பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி ஆறுதல்

முன்னாள் ராணுவ வீரரான அந்த விவசாயியிடம், இது முற்றிலும் தவறு. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வருத்தப்படாதீர்கள் என ராகுல் காந்தி கூறினார்.;

Update: 2024-02-14 08:57 GMT

சண்டிகார்,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், அம்பாலா என்ற இடத்திற்கருகே ஷம்பு எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, விவசாயிகளை கலைந்து போகும்படி போலீசார் கூறினர். ஆனால், அவர்கள் திரும்பி செல்லாத நிலையில், அவர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதில், விவசாயிகள் கலைந்து ஓடினர். விவசாயிகள் தரப்பில் பலர் காயமடைந்தனர். இதேபோன்று, போலீசாரை நோக்கி கற்களை வீசி எறிந்தனர். இதில், போலீசாரும் காயமடைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில், போலீசார் தரப்பில் துணை போலீஸ் சூப்பிரெண்டு உள்பட 24 பேரும், விவசாயிகள் தரப்பில் 60 பேரும் காயமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், டெல்லி பேரணியில் கலந்து கொண்டு, காயமடைந்த விவசாயி ஒருவரிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தொலைபேசி வழியே இன்று பேசினார்.

இதுபற்றி முன்னாள் ராணுவ வீரரான அந்த விவசாயியிடம் ராகுல் காந்தி பேசும்போது, இது முற்றிலும் தவறு. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வருத்தப்படாதீர்கள் என கூறினார்.

நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விசயத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள். இதற்கு முன்பும் நாட்டுக்காக நீங்கள் உழைத்தீர்கள். இப்போதும் அதனை நன்றாக செய்து வருகிறீர்கள். நன்று. அதிர்ஷ்டம் ஏற்படட்டும் என்று பேசியுள்ளார்.

இந்த உரையாடலின்போது, உங்களுக்கு உடலில் எந்த பகுதியிலெல்லாம் காயம் ஏற்பட்டது என்று விவசாயியிடம் கேட்டறிந்து கொண்டார். போலீசாரின் நடவடிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்றும் கேட்டு தெரிந்து கொண்டார்.

வேளாண் சட்டங்களை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதே சமயத்தில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

இந்த சூழலில், டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லிக்கு படையெடுத்தனர். தொடர்ந்து, இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில், அவர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்