நான் அதிர்ஷ்ட முதல்-மந்திரி என்றால் பசவராஜ் பொம்மை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டாரா?-பா.ஜனதாவுக்கு, குமாரசாமி கேள்வி

நான் அதிர்ஷ்ட முதல்-மந்திரி என்றால், பசவராஜ் பொம்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-07-06 22:03 GMT

பெங்களூரு: நான் அதிர்ஷ்ட முதல்-மந்திரி என்றால், பசவராஜ் பொம்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிர்ஷ்ட முதல்-மந்திரி

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரான குமாரசாமி அதிர்ஷ்டத்தின் மூலமாக முதல்-மந்திரி பதவிக்கு வந்ததாக பா.ஜனதாவினர் கூறி இருந்தனர். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி டுவிட்டர் பதிவு முலமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

நான் அதிர்ஷ்டத்தின் மூலமாக முதல்-மந்திரி ஆனேன் என்று நீங்கள் கூறி வருகிறீர்கள். தற்போது முதல்-மந்திரியாக இருக்கும் பசவராஜ் பொம்மை சட்டசபை தேர்தலில் மக்கள் ஆதரவுடன் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாரா?. ஆபரேஷன் தாமரை முதல்-மந்திரி என்பதை விட, அதிர்ஷ்ட முதல்-மந்திரி என்பது உயர்வானது தான். இதன் மூலம் எனக்கு எந்த அவமானமும் ஏற்படவில்லை.ஆபரேஷன் தாமரை முதல்-மந்திரி என்பது தான் கீழ் மட்டமானது.

குடும்ப அரசியல் பட்டியல்

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது, ஜனதாதளம் (எஸ்) கட்சி தான். உங்கள் சொந்த கட்சியை உடைத்துவிட்டு, என்னுடன் கைகோர்க்க தயாராக இருந்தனர். நான் தான் கட்சியை உடைக்க வேண்டாம் என்று உங்களது தலைவரிடம் கூறினேன். இதில், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்களது கட்சி தலைவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சி குடும்ப அரசியல் செய்வதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். பா.ஜனதாவில் குடும்ப அரசியல் இல்லையா?. அதற்கான பட்டியலை வெளியிடுகிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

எடியூரப்பா, அவரது மகன்கள், ஜெகதீஷ் ஷெட்டர், அவரது குடும்பம், ரமேஷ் ஜார்கிகோளி குடும்பம், சோமண்ணா குடும்பம், சசிகலா ஜோலே குடும்பம், உமேஷ் கட்டி குடும்பம் என சொல்லிக் கொண்டே போகலாம். பா.ஜனதாவின் குடும்ப அரசியல் பற்றி மற்ற மாநிலங்களில் இருப்பவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டுமா?.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்