பிரதமர் மோடி பேரணியில் ராணுவ வீரர் போல் வி.வி.ஐ.பி. பகுதியில் நுழைந்த மர்ம நபர் கைது
பிரதமர் மோடி வருகைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் ராணுவ வீரர் என கூறி வி.வி.ஐ.பி. பகுதியில் நுழைந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை,
பிரதமர் மோடி கர்நாடகா மற்றும் மராட்டியத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர், மராட்டியத்தின் மும்பை நகரில் ரூ.38 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், நாட்டுக்கு அர்ப்பணித்தும் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டி உரையாற்றினார்.
இதனை முன்னிட்டு அவரது வருகைக்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி பேரணியாக மும்பை நகருக்கு வருவதற்கு முன்பு, மர்ம நபர் ஒருவர் கூட்டத்தின் உள்ளே புகுந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி மும்பை நகர போலீசார் இன்று கூறும்போது, நவிமும்பையை சேர்ந்த 35 வயதுடைய நபர் ராணுவ வீரர் போன்று உடையணிந்து கொண்டு வந்துள்ளார்.
அவர், பிரதமர் மோடி பந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதிக்கு வருவதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பு அதிக பாதுகாப்பு நிறைந்த வி.வி.ஐ.பி. பகுதிக்குள், தன்னை ராணுவத்தின் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த வீரர் என கூறி கொண்டு திடீரென உள்ளே நுழைய முயன்றார்.
அவரை சந்தேகத்தின் பேரில் மும்பை குற்ற பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர் பெயர் ரமேஷ்வர் மிஷ்ரா (வயது 35) என்பதும் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அவர் ஐ.பி.சி.யின் பல்வேறு சட்ட பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, பந்திரா கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு வருகிற 24-ந்தேதி வரை போலீஸ் காவல் அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளனர்.