மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ரூ.47 லட்சம் ஊதியத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை
முழு பார்வை திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
இந்தூர்,
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மென்பொறியாளருக்கு ரூ.47 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் மைக்ரோசாப்டில் வேலை கிடைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யாஷ் சோனகியா. 25 வயதான இவர் எட்டு வயதில் பார்வையை முற்றிலும் இழந்தவர். பி-டெக் பட்டப் படிப்பை முடித்துள்ள இவர் "ஸ்கிரீன் ரீடர்" மென்பொருளின் உதவியோடு கோடிங் கற்றுள்ளார்.
பின்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு முடிந்தபின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது.
அதன்படி யாஷ் சோனகியாவுக்கு பெங்களூருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகம் ஆண்டுக்கு 47 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதன்படி யாஷ் சோனகியா விரைவில் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் வேலையில் இணைய இருக்கிறார். தற்போதைய நிலையில் அவர் வீட்டில் இருந்தே வேலை செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் அனுமதித்துள்ளது.
இது குறித்து யாஷ் தந்தை யாஷ்பால் கூறும்போது, "என் மகன் எட்டு வயதை எட்டியபோது கண் பார்வையை இழந்தான். ஆனால் அவன் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற அவனது கனவுக்கு நாங்கள் நம்பிக்கை அளித்தோம்.
யாஷ் என் மூத்த மகன். நானும் அவனுக்காக கனவு கண்டேன். ஒரு தொழில்முறை மென்பொருள் பொறியியலாளராக வேண்டும் என்ற அவரது கனவு பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியாக நனவாகியுள்ளது" என தெரிவித்தார்.