விஸ்மயா தற்கொலை வழக்கு: தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது - கேரள ஐகோர்ட்டு உத்தரவு

விஸ்மயா தற்கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் கிரண்குமார் மனுத்தாக்கல் செய்தார்.;

Update: 2022-12-14 10:57 GMT

கொல்லம்,

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளித்தது. கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பன்னிரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சம் ரூபாயை பாதிக்கபட்ட விஸ்மயா குடும்பத்திற்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் கிரண்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அலெக்சாண்டர் தாமஸ், சோபி தாமஸ் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கோர்ட்டு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என மறுத்து விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்