விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி..!

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-03 11:52 GMT

புதுடெல்லி,

விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை டெல்லி கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி, சென்னை உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏற்கெனவே டெல்லி சிபிஐ நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்து இடைக்கால நிவாரணம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மீண்டும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் கார்த்தி சிதம்பரத்தை தற்போது கைது செய்வதற்கு எவ்வித தடையும் அமலாக்கத்துறைக்கு இல்லை என்பது குறிப்பிடப்படுகிறது. இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்