ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுப்படுத்தினால் தீவிர போராட்டம்; கன்னட அமைப்பு எச்சரிக்கை

கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுப்படுத்த கூடாது என்றும், மீறினால் போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பு எச்சரித்துள்ளது.

Update: 2023-02-27 20:35 GMT

பெங்களூரு:

ஓசூர் வரை நீட்டிக்க அனுமதிக்கமாட்டோம்

பெங்களூருவில் கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவரான பிரவீன் ஷெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை நடந்து வருகிறது. பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எக்காரணத்தை கொண்டும் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம். கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது, ஒகேனக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரும்ப பெற வேண்டும்

பெங்களூரு, பெங்களூரு புறநகரின் குடிநீர் திட்டமான மேகதாதுவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், மெட்ரோ ரெயில் திட்டத்தை ஓசூர் வரை விரிவுபடுத்துவதற்கு வழங்கிய அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இந்த திட்டத்தால் கன்னடர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டித்தால், அங்கிருந்து தமிழர்கள் பெங்களூருவுக்கு வந்து பல நிறுவனங்களில் வேலைக்கு சேருவார்கள். கன்னடர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும். எங்களின் எதிர்ப்பையும் மீறி ஓசூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்தினால் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்