வன்முறை வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
உள்துறைக்கு மந்திரிகள் கடிதம் எழுதியதும் வன்முறை வழக்குகளில் கைதானவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:
உள்துறைக்கு மந்திரிகள் கடிதம் எழுதியதும் வன்முறை வழக்குகளில் கைதானவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மந்திரிசபை துணை குழுவில்...
உப்பள்ளியில் போலீஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டம், வன்முறை தொடர்பாக கடந்த பா.ஜனதா ஆட்சியில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த 138 பேர் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறார். துணை முதல்-மந்திரியோ, பிற மந்திரிகளோ எந்த ஒரு விவகாரம் தொடர்பாகவும் பதிவான வழக்குகளை திரும்ப பெறும்படி கூறினால், சம்பந்தப்பட்டவர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள்.
மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது கோரிக்கையை மட்டுமே மத்திய உள்துறைக்கு தெரிவிக்கிறார்கள். இந்த கோரிக்கை மாநில போலீஸ் டி.ஜி.பி மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். போலீசார் அளிக்கும் தகவல்களின்படி, வழக்குகளில் இருந்து விடுவிப்பது குறித்து மந்திரிசபை துணை குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். வழக்குகளில் இருந்து விடுவிக்கலாமா, அதனால் ஏற்படும் சாதகம் மற்றும் பாதகம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
ஆதாரங்களை வெளியிடவா?
எந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது உள்ளிட்டவை குறித்தும் பரிசீலிக்கப்படும். அதன்பிறகு, மந்திரிசபை கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்படும். மந்திரிசபை கூட்டத்தில் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், அந்த கோரிக்கை திரும்ப அனுப்பப்படும். எனவே உப்பள்ளி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதால், அவர்களை விடுவிக்க கோரி துணை முதல்-மந்திரி கடிதம் மட்டுமே எழுதி உள்ளார். அதுவே இறுதியானது இல்லை.
இந்த விவகாரத்தில் பா.ஜனதாவினர் தேவையில்லாத அரசியல் செய்கின்றனர். அவர்களது ஆட்சி காலத்தில் எத்தனை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு இருந்தனர் என்பதை நான் கூறவா?. அதற்கான ஆதாரங்களை வெளியிடவா?. மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்துறைக்கு கடிதம் எழுதுவதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு மந்திரி பரமேஸ்வர் கூறினார்.