சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளால் சுரங்க ஏஜெண்டு வெட்டிக்கொலை
சோடெடோங்கர் கிராமத்தை சேர்ந்த கோமல் மஞ்சி என்பவரை வழிமறித்த நக்சலைட்டுகள் கோடாரியால் சரமாரியாக வெட்டினர்.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள சோடெடோங்கர் கிராமத்தை சேர்ந்தவர் கோமல் மஞ்சி. இவர் நேற்று காலை தனது வீட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நக்சலைட்டுகள் சிலர் அவரை வழிமறித்து கோடாரியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் நக்சலைட்டுகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கோமல் மஞ்சியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவரது உடலுக்கு அருகில் நக்சலைட்டுகள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், கோமல் மஞ்சி நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள இரும்பு தாது சுரங்கத்தின் ஏஜெண்டாக செயல்பட்டு பணம் சம்பாதித்து வந்ததாக நக்சலைட்டுகள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.