மற்றவர்களுக்கு காட்டாமல் ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல - கேரள ஐகோர்ட்டு கருத்து

மற்றவர்களுக்கு காட்டாமல் ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல என கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2023-09-13 01:59 GMT

கோப்புப்படம்

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2016-ம் ஆண்டு 33 வயது வாலிபர் ஒருவர் சாலையோரமாக நின்று செல்போனில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்தார். இதற்காக அவரை கைது செய்த போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292ன் கீழ் ஆபாசமாக நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்டையில் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அது தொடர்பாக அவருக்கு எதிரான கோர்ட்டு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டு நீதிபதி குன்னி கிருஷ்ணன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

ஆபாச புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மற்றவர்களுக்கு காட்டாமல் தனிப்பட்ட நேரத்தில் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது. ஏனெனில் அது தனிப்பட்ட விருப்பம். அத்தகைய செயலை குற்றமாக அறிவிப்பது, ஒருவரின் தனியுரிமையில் ஊடுருவுவதாகவும், அவரது தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடுவதாகவும் அமையும். எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292ன் கீழ் வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.

இதனால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்கிறேன். ஆபாசப் படங்கள் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. புதிய டிஜிட்டல் உலகம் குழந்தைகளுக்கும் கூட அதை அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. எனவே பெற்றோர் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக இணைய வசதியுடன் கூடிய செல்போன்களை அவர்களிடம் வழங்கக்கூடாது.

குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் அல்லது கால்பந்து அல்லது அவர்கள் விரும்பும் பிற விளையாட்டுகளை விளையாட பெற்றோர் அனுமதிக்க வேண்டும். எதிர்காலத்தில் நமது தேசத்தின் நம்பிக்கையின் தீபமாக மாற இருக்கும் ஆரோக்கியமான இளம் தலைமுறைக்கு அது அவசியம். இவ்வாறு நீதிபதி குன்னி கிருஷ்ணன் தனது தீர்ப்பில் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்