ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு..! நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது - அரவிந்த் கெஜ்ரிவால்
ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
புதுடெல்லி,
அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்பை வரவேற்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ,
"ராகுல் காந்திக்கு எதிரான அநியாயமான அவதூறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டை நான் வரவேற்கிறேன். இது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அவருக்கும் வயநாடு மக்களுக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்