போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரம்: டாக்டர் வீட்டில் ரூ.16 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு
போலீஸ் நிலையம் அருகிலேயே டாக்டர் வீட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு-
நஞ்சன்கூடுவில் போலீஸ் நிலையம் அருகிலேயே டாக்டர் வீட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
டாக்டர் வீட்டில் திருட்டு
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு டவுன் பகுதியை சேர்ந்தவர் வைத்யா. இவர் டாக்டர் ஆவார். இவரது வீட்டின் எதிரே நஞ்சன் கூடு டவுன் போலீஸ் நிலையம் உள்ளது. இந்தநிலையில் அவர் தனது குடும்பத்துடன் மைசூருவுக்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தங்கநகைகள், வெள்ளிபொருட்களை திருடிவிட்டு சென்றனர்.
பின்னர் வீடு திரும்பிய வைத்யா வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 300 கிராம் தங்க நகைகள், வௌ்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும். இதுகுறித்து டாக்டர் வைத்யா, நஞ்சன்கூடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களையும் கைப்பற்றினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.அதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்காணிப்பு கேமரா
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அத்துடன் மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். போலீஸ் நிலையம் எதிரே உள்ள டாக்டர் வீட்டிலேயே மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.