நஞ்சன்கூடுவில் பட்டப்பகலில் துணிகரம்; பெண்ணை கட்டிப்போட்டு பல லட்சம் ரூபாய் நகை-பணம் கொள்ளை

நஞ்சன்கூடுவில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு பல லட்சம் ரூபாய் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-09-17 19:00 GMT

மைசூரு;


மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு டவுன் ராமசாமி லே-அவுட் 1-வது பிளாக்கில் வசித்து வருபவர் சம்புசாமி. இவரது மனைவி தாட்சாயினி. இதில் சம்புசாமி அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சம்புசாமி காலை வேலைக்கு சென்றார்.

அவரது மனைவி தாட்சாயினி வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் மர்மகும்பல் 3 பேர், கூரியர் வேலை செய்பவர்கள் போல் கையில் ஒரு பார்சலுடன் சம்புசாமி வீட்டின் கதவை தட்டி பார்சல் வந்திருப்பதாக கூறியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த தாட்சாயினி சத்தம் கேட்டு வந்து கதவை திறந்துள்ளார்.

இதில் மர்மநபர்கள், கதவை தள்ளிகொண்டு வீட்டிற்கு அதிரடியாக புகுந்துள்ளனர். மேலும் தாட்சாயினியின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் பிளாஸ்டரை ஒட்டியுள்ளனர்.

நகை-பணம் கொள்ளை


மேலும் தப்பிக்க நினைத்தாலோ, சத்தம்போட நினைத்தாலோ கற்பழித்து விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதில் அவர்கள் கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் பேசியுள்ளனர். பின்னர் தாட்சாயினி அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல், வளையல் ஆகியவற்றை கழற்றினர்.

இதையடுத்து வீட்டின் பீரோ உள்ளிட்ட இடங்களில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி விட்டு தப்பி சென்றனர். இந்த நிலையில் மர்மகும்பல் வீட்டில் இருந்து ஓடுவதை பாா்த்த அந்த பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மகும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதையடுத்து அவர்கள் தாட்சாயினி வீட்டிற்குள் சென்றுபாா்த்த போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து அவர்கள் நஞ்சன்கூடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளை நடத்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கபணம் ஆகியவை கொள்ளை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்