கர்நாடகத்தில் வாகன திருட்டு குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கலாம்; போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தகவல்

கர்நாடகத்தில் வாகன திருட்டு குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் கூறினார்.

Update: 2022-11-04 23:41 GMT

பெங்களூரு:

குற்றச்சம்பவங்கள்

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலை, படிப்பு போன்ற காரணங்களுக்காக பலர் கர்நாடகத்தில் தஞ்சம் அடைகின்றனர். இதனால் பெங்களூரு, மைசூரு போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்கிறது. மக்கள் அடர்த்தியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இரவு நேரங்களில் திருட்டு, வீடுகள் முன்பு நிற்கும் வாகனங்களை குறிவைத்து திருடி அவற்றை வெளிமாவட்டங்களில் கொண்டு சென்று விற்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அதனை தடுக்கும் நோக்கில் கர்நாடக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வசதி அறிமுகம்

இந்த நிலையில் வாகனங்கள் திருடப்பட்டால், உடனடியாக ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்யும் வசதி, கர்நாடக மாநில போலீசார் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வாகனங்கள் திருட்டு தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகின்றன. அந்த வழக்குகள் தொடர்பாக போலீஸ் நிலையங்களுக்கு சம்பவம் நடந்து 20 மணி நேரம் கழித்துதான், புகார் அளிக்கப்படுகிறது. இதனால் போலீசார் விசாரணை மேற்கொண்டு, வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு காலதாமதம் ஆகிறது. ஆனால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், போலீசார் துரிதமாக செயல்பட்டு, வாகனங்களை மீட்க முடியும்.

சட்ட நடவடிக்கை

இந்த நிலையில் மாநில போலீசார் சார்பில், ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தை இழந்த நபர், போலீஸ் நிலையத்தை தேடி சென்று புகார் அளிப்பதற்கு பதில், அவர் அங்கு இருந்தபடி தனது செல்போனில் வாகனம் திருடப்பட்டது குறித்து புகார் அளிக்கலாம்.

அந்த புகார் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்படும். அதன்பேரில் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து திருடப்பட்ட வாகனத்தை மீட்பார்கள். அதே சமயம் இந்த ஆன்லைன் சேவையை தவறாக பயன்படுத்தி போலீசாரின் நேரத்தை வீணடித்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதி குறித்து கூடுதல் டி.ஜி.பி. உமேஷ் குமார் கூறுகையில், 'வாகன திருட்டு குறித்து அறிமுகம் செய்யப்பட்ட ஆன்லைன் புகார் சேவையை இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி உள்ளனர். சோதனை முறையில் நடத்தப்பட்ட இந்த சேவை மூலம் பலரும் பயனடைந்துள்ளனர்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்