வீர சாவர்க்கர் பட பேனர் விவகாரம் எதிரொலி: தட்சிண கன்னடாவில், சா்ச்சைக்குரிய பேனர்களை உடனே அகற்ற வேண்டும்
தட்சிண கன்னடா மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய பேனர்களை உடனே அகற்ற ேவண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.;
மங்களூரு;
லேசான தடியடி
சிவமொக்காவில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு முக்கிய சாலைகளில் வீர சாவர்க்கர் புகைப்படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த பேனரை அகற்ற முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக சிவமொக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பேனரை அகற்ற முயன்றதாக நதீம், அப்துல் ரகுமான் மற்றும் சபியுல்லா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேனர் அகற்றிய விவகாரம் தொடர்பாக அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதால் சிவமொக்காவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போலீசார் நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தட்சிண கன்னடா, குடகு உள்பட பல மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பேனர் விவகாரம் குறித்து தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா பேசுகையில் கூறியதாவது:-
சர்ச்சைக்குரிய பேனர்கள்
வீர சாவர்க்கர் புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டதால் பலபகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்திலும் பலபகுதிகளில் சர்ச்சைக்குரிய பேனர்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனை மாவட்ட, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.
மேலும் அவற்றை உடனடியாக அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும். அதுபோன்ற பேனர்களை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தின் முக்கிய சர்க்கிள், சாலை பகுதிகளில் பேனர்கள் வைப்பதற்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் பிரசுரிக்க வேண்டும். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைகளின் படி மாவட்டத்தில் ஒலிபெருக்கிகள் வைக்க வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.