89 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய வாணி விலாஸ் சாகர் அணை

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் 89 ஆண்டுகளுக்கு பிறகு வாணி விலாஸ் சாகர் அணை நிரம்பியது.

Update: 2022-09-01 15:34 GMT

சிக்கமகளூரு;


வெள்ள பாதிப்புகள்

கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மலைநாடு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களுக்குள் மழைநீர் புகுந்து.

மேலும், தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

இதனால் விளை பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.இந்த நிலையில் கொட்டி தீர்த்த பருவமழையால் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகாவில் உள்ள வாணி விலாஸ் சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நிரம்பி வழிந்தது. இதனால் ஹரனகனிவே பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மக்கள் கூட்டம்

வாணி விலாஸ் அணை கடந்த 1933-ம் ஆண்டு நிரம்பியதை அடுத்து தற்போது பெய்த கனமழைக்கு நிரம்பி உள்ளது. 89 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அணை நிரம்பியது குறித்து தகவல் அறிந்ததும் அணை திறப்பு பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்தனர். சிலர் குடும்பத்தினருடன் சென்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

இதனால் அணைக்கட்டு முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டது. தொடர்ந்து பெய்து கனமழையால் அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் அணை பகுதிக்கு மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

130 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையை 1908-ம் ஆண்டு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜா உடையார் கட்டமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்