கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா பதவி ஏற்றார்
கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா நேற்று தனது பதவியை ஏற்றுக் கொண்டார்.;
பெங்களூரு:
கர்நாடக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தவர் ரவிக்குமார். அவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா பதவி ஏற்று கொண்டார். அவர் 1986-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அவர் கர்நாடக அரசின் 39-வது தலைமை செயலாளர் ஆவார். இதற்கு முன்பு பெண்கள் தலைமை செயலாளர் பதவியை 2000-ம் ஆண்டு தெரசா பட்டாச்சார்யா, 2006-ம் ஆண்டு மாலதி தாஸ் மற்றும் 2017-ம் ஆண்டு ரத்னபிரபா ஆகியோர் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வந்திதா சர்மா அடுத்த ஆண்டு(2023) நவம்பர் மாதம்
30-ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.சட்டசபை செயலாளராக விசாலாட்சி, மேல்-சபை செயலாளராக மகாலட்சுமி ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தின் உயரிய பதவியான தலைமை செயலாளராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் விதான சவுதாவில் மூன்று முக்கியமான பதவிகளை பெண்கள் வகிப்பது குறிப்பிடத்தக்கது.