மைசூருவில் வந்தே பாரத் ரெயிலை 14 நிமிடத்தில் சுத்தம் செய்த ஊழியர்கள்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மைசூருவில் 14 நிமிடத்தில் வந்தே பாரத் ரெயிலை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.;
மைசூரு
தூய்மை இந்தியா திட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதாவது காந்தியின் கனவை நனவாக்க தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கூறி இருந்தார்.
அதன்படி நேற்று பா. ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், ஷோபா உள்ளிட்டோர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், மைசூரு ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரெயில் சுத்தம் செய்யப்பட்டது. மைசூரு- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மைசூரு ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரெயில் மதியம் 12.30 மணிக்கு வந்தது. அதில் இருந்து பயணிகள் இறங்கினர்.
14 நிமிடத்தில் சுத்தம் செய்தனர்
தென்மேற்கு ரெயில்வே சார்பில் தலைமை அதிகாரிகள் 3 பேர் முன்னிலையில் வந்தே பாரத் ரெயில் சுத்தம் செய்யப்பட்டது. இந்த பணியில் 48 ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் 16 பெட்டிகள் கொண்ட ரெயிலை 14 நிமிடத்தில் சுத்தம் செய்தனர்.
அதாவது ஒவ்வொரு பெட்டிகளுக்கும் 3 பேர் ரெயில்வே அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களின் தலைமையில் ஊழியர்கள் ஒவ்வொரு ரெயில் பெட்டிகளில் வெளிப்புறம், உட்புறம் என அனைத்து இடங்களையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
மேலும் ரெயில்வே பிளாட்பாரம் வளாகத்தில் இருந்த குப்பைகளையும் ஊழியர்கள் தூய்மைப்படுத்தினர். 14 நிமிடத்தில் வந்தே பாரத் ரெயிலை தூய்மை செய்த ஊழியர்களை மைசூரு மண்டலம் தென்மேற்கு ரெயில்வே அதிகாரி ஷில்பா பாராட்டினார்.