திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழ நீதிமன்றம் அனுமதி...! அதிர்ச்சியில் கணவர்...!

திருமணமான பெண் காதலனுடனேயே வாழ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் கணவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

Update: 2023-06-20 09:14 GMT

டேராடூன்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012 இல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு 10 வயது, மகளுக்கு ஆறு வயது.

ஜிம் பயிற்சியாளரின் மனைவி பரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக ஊடகங்களில் பழகி உள்ளார். இவர்களுக்கு இடையிலான பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறியது. பின்னர் அந்த பெண் அவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு ஆகஸ்ட் 7, 2022 அன்று சமூக ஊடகங்களில் பழக்கமான நபருடன் ஓடி விட்டார். பின்னர் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இதை தொடர்ந்து ஜிம் பயிற்சியாளர் மாநில ஐகோர்ட்டை நாடினார்.

தனது மனைவி வேறொருவருடன் வாழ்ந்து வருவதாகவும், தனது மனைவி சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளார்.

நீதிபதிகள் மனைவியை மே 4 ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸ் சூப்பிரெண்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அந்த பெண் பரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் தான் முழு விருப்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும். தனது கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால், இனி அவருடன் வாழ விரும்பவில்லை என கூறினார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பங்கஜ் புரோகித் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அந்த பெண்ணின் விருப்பத்தின் பேரிலேயே அந்த பெண் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அந்தப் பெண் எப்படி இருந்தாரோ அப்படியே வாழ நீதிமன்றம் அனுமதித்தது.

அந்த தீர்ப்பை கேட்ட கணவர் அதிர்ச்சி அடைந்து வேதனை தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அவரது வழக்கறிஞர் அருண்குமார் அதிருப்தி தெரிவித்தார், இதுபோன்ற தீர்ப்பு திருமண முறைக்கு ஆபத்தாக மாறும். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்