உத்தர பிரதேசம்: மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி அமித்ஷா நேரில் அஞ்சலி

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி அமித்ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-10-10 06:52 GMT



குருகிராம்,


உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆக்சிஜன் அளவும் அவருக்கு குறைந்தது.

இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் அவரை சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின்னர், அவரது மகன் மற்றும் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியான அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் டெல்லிக்கு விமானத்தில் சென்று பின்னர், மாலையில் மருத்துவமனைக்கு சென்றனர். முலாயம் சிங்கின் சகோதரர், அவரது மகன் உள்பட குடும்பத்தினர் பலர் உடனிருந்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு (சி.சி.யூ.) கடந்த 3-ந்தேதி கொண்டு சென்றனர். சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர், அகிலேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முலாயம் சிங்கின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தனர். அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என இருவரும் உறுதி அளித்தனர்.

முலாயம் சிங் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என உத்தர பிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனை அவரது மகன் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்-மந்திரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதேபோன்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் மருத்துவமனையில் இருந்த அகிலேஷ் யாதவுக்கு ஆறுதல் கூறினார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி மாநிலத்தில் 3 நாட்கள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்