ஞானவாபி வழக்கு தொடுத்த முக்கிய பிரமுகர் விலகல்: பின்னணி என்ன?
ஞானவாபி வழக்கு தொடுத்த முக்கிய பிரமுகர் விலகியுள்ளார். இதற்கான பின்னணி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
வாரணாசி,
உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் மாதா சிருங்கார் கவுரி, விநாயகர், அனுமன் உள்ளிட்ட இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கேட்டு பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவை நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இந்துக்கள் தரப்பில் முக்கிய வழக்குதாரர்களில் ஒருவரான விஷ்வ வேதிக் சனாதன சங்கத்தின் தலைவரான ஜிதேந்திர சிங் விசென், தானும் தனது குடும்பத்தினரும் ஞானவாபி மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளில் இருந்தும் விலகிக்கொள்வதாக திடீரென அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "நானும் எனது குடும்பத்தினரும் நாட்டின் நலனையொட்டி பல்வேறு கோர்ட்டுகளில் தொடர்ந்துள்ள ஞானவாபி மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளில் இருந்தும் விலகிக்கொள்கிறோம். இந்துக்கள் தரப்பு உள்பட பல்வேறு தரப்பில் இருந்து தொல்லைகளை எதிர்கொண்டு அவமதிப்பைச் சந்தித்துள்ளோம். அப்படிப்பட்ட சூழலில், ஒரு எல்லைக்குட்பட்ட சக்தியையும், வளங்களையும் கொண்டு என்னால் இந்த தர்ம போரில் தொடர்ந்து சண்டையிட முடியாது, எனவே அதில் இருந்து விலகுகிறேன்" என கூறி உள்ளார்.