மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்கா மலேயே அவர் பதவி விலகினார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அமைத்து அபார வெற்றி கண்டன.
தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்த, அதை பா.ஜனதா விடாப்பிடியாக மறுத்து விட்டது.
சிவசேனாவில் அதிருப்தி
இதனால் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த கட்சியின் உறவை முறித்து கொண்ட சிவசேனா தனது இந்துத்வா கொள்கைக்கு முரணான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து அரசியல் களத்தில் வியப்பை ஏற்படுத்தியது.
கூட்டணி அரசின் முதல்-மந்திரியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 2½ ஆண்டு காலத்தை கடந்து ஆட்சி செய்து வந்த நிலையில், கடந்த 20-ந் தேதி அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் இரவோடு, இரவாக குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அங்கிருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி சென்று சொகுசு ஓட்டலில் முகாமிட்டனர்.
உத்தவ் தாக்கரேயின் விசுவாசியான மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்ட அவர்கள், பா.ஜனதாவுடன் கூட்டணியை புதுப்பித்து ஆட்சியமைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். தற்போதைய ஆட்சியால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நல்ல பலனை அனுபவித்து கட்சியை வளர்ப்பதாகவும், சிவசேனா வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்துத்வா கொள்கையுடன் ஒத்துபோகும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.
கவர்னரை சந்தித்த பட்னாவிஸ்
சிவசேனாவின் உள்கட்சி விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று பா.ஜனதா கூறி வந்ததாலும், உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு, புதிய அரசை அமைக்க பா.ஜனதா திரைமறைவில் தீவிரம் காட்டியது.
இந்தநிலையில் மராட்டிய பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் இரவு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து, சிவசேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால், சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னதாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் கவர்னரிடம் இதே கோரிக்கையை வைத்து இருந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இந்த நிலையில் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று அதிகாலை உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் கவர்னரின் உத்தரவை எதிர்த்து சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பு திட்டமிட்டபடி நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
ராஜினாமா
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான சிறிது நேரத்திலேயே தனது ராஜினாமா முடிவை உத்தவ் தாக்கரே வெளியிட்டார்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க விரும்பவில்லை என்று கவர்னருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்ததுடன், தனது ராஜினாமா கடிதத்தையும் கவர்னருக்கு அனுப்பிவைத்தார்.
உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை கவர்னரும் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மாலையில் மந்திரி சபை கூட்டத்தை கூட்டி, இதுநாள் வரை ஒத்துழைப்பு கொடுத்த தனது மந்திரி சகாக்களுக்கும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால் சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை கைவிட்டு விட்டதாக வேதனை தெரிவித்தார்.
புறப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
இதற்கிடையே கவுகாத்தி ஓட்டலில் தங்கியிருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், அந்த ஓட்டலை காலி செய்து இரவில் கோவா சென்றடைந்தனர். அங்கிருந்து இன்று காலை மும்பை வருகிறார்கள்.
தனக்கு சுயேச்சைகள் உள்பட 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அதிருப்தி அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
கட்சிகளின் பலம்
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. உயிரிழந்ததை அடுத்து, தற்போது அதன் பலம் 287 ஆக உள்ளது. உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் அவரது அணிக்கு 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டும் உள்ளது.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே பதவி விலகி உள்ளார்.