பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமெரிக்க தூதரின் பயணத்துக்கு இந்தியா கடும் அதிருப்தி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு அமெரிக்க தூதர் சென்றதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர், டொனால்டு புளோம். இவர் கடந்த 3-ந்தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அங்குள்ள ஆசாத் ஜம்மு-காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நட்ட அவர், 2005-ம் ஆண்டு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினார்.
மேலும் அங்குள்ள முசாபாராபாத் நகருக்கு சென்ற டொனால்டு புளோம், ஆக்கிரமிப்பு காஷ்மீரை, சுதந்திர காஷ்மீர் எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க தூதரின் இந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயணம் இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் அவர் ெசன்றது கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவிடம் தனது அதிருப்தியை இந்தியா தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு அமெரிக்க தூதர் சென்றது தொடர்பான எங்கள் அதிருப்தியை அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம்' என்று கூறினார்.
இதைப்போல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகளை நடத்திய டொனால்டு புளோமுக்கும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.