முகத்தில் சிறுநீர் கழித்த பா.ஜ.க. பிரமுகரை விடுதலை செய்ய வேண்டும் - பாதிக்கப்பட்ட நபர் அரசுக்கு கோரிக்கை
பர்வேஷ் சுக்லா தங்கள் கிராமத்தின் பண்டிதராக இருப்பவர் என்று என்று பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளி தெரிவித்துள்ளார்.;
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தஷ்ரத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பர்வேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளியை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகார் தனது இல்லத்திற்கு வரவழைத்து அவரது பாதங்களை கழுவி மன்னிப்பு கோரியதோடு, இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பர்வேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், அவரது தவறுக்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளி தஷ்ரத் ரவத் தெரிவித்துள்ளார். மேலும் பர்வேஷ் சுக்லா தங்கள் கிராமத்தின் பண்டிதராக இருப்பவர் என்றும், அவரை அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.