சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்ற பிரச்சாரம் மூலம் அரசின் திட்டங்கள் முடக்கம்: நகர்ப்புற நக்சல்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பல ஆண்டுகளாக அணையின் கட்டுமான பணிகளை நகர்ப்புற நக்சல்கள் நிறுத்திவைத்தனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Update: 2022-09-23 11:48 GMT

ஆமதாபாத்,

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் சுற்றுச்சூழல் துறை மந்திரிகளின் தேசிய அளவிலான மாநாடு இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், பல்வேறு மாநிலங்களின் சுற்றுச்சூழல் துறை மந்திரிகளிடம் மோடி உரையாற்றினார்.

அப்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் மூலம் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேசியதாவது:-

அரசியல் பின்புலம் கொண்ட நகர்ப்புற நக்சல்கள் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான விரோத கும்பல்கள் சர்தார் சரோவர் அணை கட்டும் பணியை முடக்கினர். இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

இந்த காலதாமதத்தால் பெரும் பணம் விரயமானது. இப்போது, அணை கட்டி முடிக்கப்பட்டதும், அவர்களின் பிரச்சாரம் எவ்வளவு சந்தேகத்திற்குரியவை என்பதை நீங்கள் நன்றாக அறிந்துகொள்ள முடியும்.

வணிகத்தை எளிதாக்க, மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இது போன்ற திட்டங்கள், தேவையில்லாமல் முடங்கிப் போகாமலும், தடைபடாமல் இருப்பதையும் பார்த்துக் கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால் இத்தகைய நகர்ப்புற நக்சல்கள் இன்னும் செயலில் உள்ளனர். இப்படிப்பட்டவர்களின் சதியை முறியடிக்க நாம் ஒரு சமநிலையான அணுகுமுறையைக் கையாள வேண்டும்.

பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. எந்த சமரசமும் இல்லாமல் திட்டங்களுக்கான அனுமதி விரைவாக வழங்கப்பட்டால் மட்டுமே வளர்ச்சி வேகம் பெறும்.

பல்வேறு மாநிலங்களில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி சுமார் 6,000 விண்ணப்பங்களும், வன அனுமதிக்கு கிட்டத்தட்ட 6,500 விண்ணப்பங்களும் இன்னும் நிலுவையில் உள்ளன.

மேம்பாலங்கள், சாலைகள் மற்றும் ரயில்வே திட்டங்கள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகின்றன என்பதையும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவோர் நினைவில் கொள்ள வேண்டும் .

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்