நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நவீன வங்கி முறைகளுக்கு மாற வேண்டும் - அமித் ஷா
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷா தெரிவித்தார்.
புதுடெல்லி,
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நவீன வங்கி முறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் நிலைத்திருக்க நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் சமச்சீர் வளர்ச்சியில் கவனம் வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடந்த விழா ஒன்றில் இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், " 1,534 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 54 திட்டமிடப்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளன. ஆனால் போதுமான வளர்ச்சி இல்லை. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் கட்டமைப்பு மாற்றங்களும், கணக்கியல் செயல்முறைகளை கணினிமயமாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த துறையில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். தற்போது, மொத்த வங்கித் துறையில் டெபாசிட் மற்றும் முன்பணம் செலுத்துவதில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் பங்கு மிகக் குறைவாக உள்ளது" என தெரிவித்தார்.