2022-ம் ஆண்டு யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்த பெண் தேர்வர்கள்...!
யுபிஎஸ்சி இறுதி தேர்வு 2022 முடிவுகள் வெளியானது. இஷிதா கிஷோர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.;
புதுடெல்லி,
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தநிலையில், 2022-ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய குடிமை பணி தேர்வுகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. 2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை நேர்முகத்தேர்வு நடைப்பெற்றது. 2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.