உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டார்.;

Update: 2022-09-01 15:36 GMT

உப்பள்ளி;

ஈத்கா மைதானம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் பகுதியில் ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கித்தூர் ராணி சென்னம்மா கணேஷ் மூர்த்தி மேம்பாட்டு அமைப்பு அனுமதி கோரியிருந்தது. இதை ஏற்ற தார்வார் மாநகராட்சி மேயர் ஈரேஷ் அனுமதி வழங்கினார்.

இதை எதிர்த்து தார்வார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாவட்ட கலெக்டர், மாநகராட்சிக்கு விநாயகர் சதுர்த்தி நடத்துவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து கித்தூர் ராணி சென்னம்மா மைதானத்தில் கிழக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

இந்த அனுமதிைய தொடர்ந்து நேற்று முன்தினம் காலை விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

16 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடம் மாநகராட்சியின் வசம் வரவேண்டியிருந்தது. ஆனால் முடியவில்லை. 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு இந்த மைதானம் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தது.

இதற்காக பலர் போராடினர். அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். அவர்கள் இ்ல்லை என்றால் இந்த மைதானம் கிடைத்திருக்காது. அன்று அவர்கள் நடத்திய போராட்டம் இன்று சுதந்திரமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று சிலை கரைப்பு

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்றுடன் (வெள்ளிகிழமை) கடைசி நாள் என்பதால் மாலையில் விநாயகரை ஊர்வலமாக எடுத்து சென்று ஏரியில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று விழா குழுவினர் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்