உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-04-06 09:50 GMT

புதுடெல்லி,

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டியே சமூகவலைதளங்களில் மனுதாரர் பதிவு செய்ததாகவும் அந்த செய்தி போலியானது என்று அறிந்தவுடன் அதை அழித்துவிட்டார் என்று ஒரு வழக்கில் மட்டுமே முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. புலன் விசாரணைக்கு ஆஜரானால் ஏனைய வழக்குகளில் கைது செய்யப்படுவார் என பிரசாந்த் குமார் உம்ரா சார்பில் வாதிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான புலன் விசாரணைக்கு பிரசாந்த் குமார் உம்ரா ஒருமுறை கூட ஆஜராகவில்லை முன்ஜாமீன் நிபந்தனைகளையும் ஏற்கவில்லை என தமிழ்நாடு காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரிய பிரசாந்த் குமார் உம்ராவின் மனு குறித்து பதில் அளிக்க தமிழ்நாடு போலீசாருக்கு உத்தரவிட்டது.

மேலும் பிரசாந்த் குமார் உம்ராவுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை முன்ஜாமின் அளித்த உத்தரவு ஏனைய வழக்குகளுக்கும் பொருந்தும் என்று தெளிவுபடுத்தியது. பிரசாந்த் குமார் உம்ரா வருகிற ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் புலன் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு இந்த பொய் செய்தியை பரப்பியதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்