வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது!
மனைவி அளித்த புகாரின் பேரில் மாமனார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
லக்னோ,
உத்தரப்பிரதேசம் மாநிலம் மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கடித்த கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகேஷ்பூரைச் சேர்ந்த அஜ்மி (22), தனது கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது கசிபி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக அவர்கள் மீது புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்த புகாரின் பேரில் மாமனார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஜ்மி தனது எப்ஐஆரில், தனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதாகவும், 5 மாத ஆண் குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த 15 ம் தேதி, வரதட்சணை கொடுக்கவில்லை என கூறி, தனது மாமியார் தன்னை அடித்ததாகவும், கணவர் நாஜிம் தனது மூக்கைக் கடித்து காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
கணவன் தன்னை பலமுறை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தியதாகவும், அப்படி தன்னை துன்புறுத்தியபோதெல்லாம் ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.