'உலகத்துக்கே முன்மாதிரியாக உத்தரபிரதேசம் திகழ்கிறது' - மெலிண்டா கேட்ஸ் புகழாரம்
உலகத்துக்கே முன்மாதிரியாக உத்தரபிரதேசம் திகழ்வதாக மெலிண்டா கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.;
லக்னோ,
மைக்ரோசாப்ட் நிறுவன இணை நிறுவனர் பில் கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ். இவர் பில் கேட்சுடன் இணைந்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை என்ற சமூக சேவை நிறுவனத்தை நடத்திவருகிறார்.
இந்த நிறுவனத்தின் சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது அரசு இல்லத்தில் மெலிண்டா கேட்ஸ் நேற்று சந்தித்தார். அவரை யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெலிண்டா கேட்ஸ், 'அடர்த்தியான மக்கள்தொகை மற்றும் பல்வேறு சமூக சவால்களுக்கு மத்தியில் கொரோனாவை உத்தரபிரதேச அரசு கையாண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விதத்தை உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். சுகாதார பாதுகாப்பு, ஊட்டச்சத்து, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற விஷயங்களில் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே முன்மாதிரியாக உத்தரபிரதேசம் திகழ்கிறது' என்று கூறினார்.
கொரோனா காலத்தில் உத்தரபிரதேச அரசுக்கு அளித்த ஆதரவுக்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார்.