உ.பி.: 10-ம் வகுப்பில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத மாணவி... நடந்தது என்ன?
உத்தர பிரதேசத்தில் 10-ம் வகுப்பில் 91.43% மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் டாப்-10 பட்டியலில் வரஇருந்த மாணவி தேர்ச்சி பெறாத நிலை ஏற்பட்டு உள்ளது.;
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு வாரிய தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், அமேதி நகரில் பாதர் பகுதியை சேர்ந்த பாவனா வர்மா என்ற மாணவியும் ஒருவர்.
அவர் தேர்வில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறவில்லை. உத்தர பிரதேச வாரியத்தின் அலட்சிய போக்கால், செய்முறை பயிற்சி தேர்வில் அனைத்து பாடங்களிலும் அவர் 3 மதிப்பெண்களே பெற்று உள்ளார்.
அவர் 70 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வில், இந்தியில் 65 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 67 மதிப்பெண்களும், சமஸ்கிருதத்தில் 66 மதிப்பெண்களும் மற்றும் அறிவியலில் 52 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்.
மொத்தம் 420 மதிப்பெண்களுக்கு 384 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். இதனால் அவரது தேர்ச்சி சதவீதம் 91.43% ஆக உள்ளது. இதுபற்றி பாவனா கூறும்போது, செய்முறை பயிற்சி தேர்வில் 30-க்கு 30 என (180/180) மதிப்பெண்கள் அனைத்து பாடங்களுக்கும் பள்ளியில் இருந்து வழங்கப்பட்டு விட்டன.
ஆனால், மதிப்பெண் சான்றிதழில் ஒவ்வொரு பாடத்திலும் 3 மதிப்பெண்களே பெற்றிருக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என வேதனை தெரிவித்து உள்ளார்.
பாவனா செய்முறை பயிற்சி தேர்வில் ஒருவேளை மொத்தம் 18 மதிப்பெண்களுக்கு பதிலாக 180 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவருக்கு 600 மதிப்பெண்களுக்கு 564 மதிப்பெண்கள் (94 சதவீதம்) கிடைத்து இருக்கும்.
அவர் மாவட்ட அளவில் டாப் 10 பட்டியலில் வந்து இருப்பார். இதுபற்றி பள்ளியின் முதல்வர் நேவல் கிஷோர் கூறும்போது, வாரியத்தின் தவறால் ம்ற்ற மாணவ மாணவியர்களும் கூட பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.