திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமான பெண்கள் 20 வாரங்களை கடந்துவிட்டால் கர்ப்பத்தை கலைக்க முடியாது: டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
திருமணம் ஆகாத இளம் பெண் ஒருவர் கர்ப்பமாகி 23 வாரங்கள் கடந்த நிலையில், கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
திருமணம் ஆகாத இளம் பெண் ஒருவர் தற்போது, கர்ப்பமாகி 23 வாரங்கள் கடந்த நிலையில், அவர் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு, திருமணமாகாமல் கர்ப்பிணியாக உள்ள ஒருவர் தாக்கல் செய்த கருக்கலைப்பு மனுவை நேற்று விசாரித்தது.
25 வயதான அந்த இளம்பெண், வரும் ஜூலை 18ம் தேதியுடன் தன்னுடைய கர்ப்ப காலத்தில் 24 வாரங்களை கடந்து விடுவார்.
இந்த நிலையில், தன்னுடன் ஒருமித்த உறவில் இருந்த தனது ஆண் துணைவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாக அந்த பெண் கோர்ட்டில் கூறினார். அவருடன் பழகியதால் இப்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த கருவை கலைக்க அனுமதிக்க வேண்டுமென்றும் வாதிட்டார். தான் தாயாக இருக்க, இன்னும் மனதளவில் தயாராக இல்லை எனவும், திருமணம் செய்யாமல் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையானது, 2003 ஆம் ஆண்டு மருத்துவக் கருவுறுதல் விதிகளின் கீழ் உள்ள எந்த உட்பிரிவுகளாலும் தெளிவாக உள்ளடக்கப்படவில்லை.
மேலும், அரசியலமைப்பின் 226வது பிரிவின் கீழ், கோர்ட்டு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, சட்டத்திற்கு அப்பால் செல்ல முடியாது. திருமணமாகாத பெண்களுக்கு மருத்துவ முறையில் கர்ப்பத்தை கலைக்க சட்டம் கால அவகாசம் அளித்துள்ளது.அதே வேளையில், இது போன்ற கருக்கலைப்பு வழக்குகளின் பிரிவிலிருந்து "திருமணமாகாமல் கர்ப்பமாகும் பெண்களை" வேண்டுமென்றே நாடாளுமன்றம் விலக்கியுள்ளது என்று தெரிவித்தனர்.
அதாவது (ஒரு பெண் கர்ப்பமாகி 20 வாரங்கள் கடந்த பின்பு, அவர் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும் வழக்குகளின் வகையிலிருந்து) இந்த விதிகளில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்ப காலத்தில் திருமண நிலை மாறும் மைனர் பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கருவில் குறைபாடு உள்ள பெண்கள் ஆகியோர் மட்டுமே அடங்குவர், "திருமணமாகாமல் கர்ப்பமாகும் பெண்கள்" சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
திருமணம் செய்யாமல் கருவுற்ற பெண்கள், 23 வாரங்களை கடந்து கர்ப்பமாக இருக்கும் போது, 24 வாரங்கள் ஆகிவிட்ட காரணத்தால், அவர்களை மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யக்கூடாது என அத்தகைய கர்ப்பிணிகளை விலக்குவது என்பது சற்று பாரபட்சமான நடைமுறை என்பது அந்த பெண்ணின் வாதம். பெண்ணின் வாதத்திற்கு கோர்ட்டு மத்திய அரசிடம் பதில் கேட்டுள்ளது.
டெல்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மனு மீதான விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், கோர்ட்டு தீர்ப்பு குறித்து அவருடைய தரப்பு பார்வை என்ன என்பதை சொல்ல வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் கருவை கலைக்கக் கூடாது என்று கபில் சிபல் ஆமோதித்தார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- அந்த பெண்ணை பாதுகாப்பாக எங்காவது ஓர் இடத்தில் வைத்திருப்பதை உறுதி செய்வோம், கர்ப்பமான அந்த பெண் குழந்தையை பிரசவித்த பின், எங்கு வேண்டுமானாலும் விட்டுப் போகலாம். குழந்தையில்லாத பலர், ஓர் குழந்தையை தத்தெடுப்பதற்காக காத்திருக்கின்றனர்.
ஓர் பெண்ணின் கர்ப்ப காலமான 36 வாரங்களில், கிட்டத்தட்ட 24 வாரங்கள் கர்ப்பம் முடிந்துவிட்டன. இந்த நிலையில், அந்த குழந்தையை கொல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது கிட்டத்தட்ட கருவை கொல்வதற்குச் சமம். இதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
குழந்தையை வளர்க்கும்படி நாங்கள் அவரை (மனுதாரர்) வற்புறுத்தவில்லை. அவர் ஒரு நல்ல மருத்துவமனைக்குச் செல்வதை உறுதி செய்வோம். மேலும், அவர் இருக்கும் இடம் தெரியாத வகையிலும் பார்த்துக் கொள்ளப்படும். அவர் குழந்தையை பிரசவித்த பின், எங்கு வேண்டுமானாலும் விட்டுப் போகலாம் என்று நீதிபதிகள் கூறினர்.