சண்டிகர் பல்கலை. விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் - மாநில முதல் மந்திரி வேண்டுகோள்

சண்டிகர் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-18 12:06 GMT

மொகாலி,

பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த சம்பவத்தில் அங்கு பயிலும் மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால், எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரே இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்திலும் கசிய விட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்தே மாணவர்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் பரவியாதாக கூறப்படுகிறது.

இந்த தகவலால் பெற்றோர்களும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தாங்கள் குளிக்கும் வீடியோ வெளியானதால் மன உளைச்சலில் 7 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் பரவி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மாணவிகள் யாரும் தற்கொலை முயற்சி செய்யவில்லை என்றும், யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பகவந்த் மான் கூறும்போது, சண்டிகர் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர், பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்